ck

(45) நள்ளிரவில் கதவைத் தட்டிய இளம்பெண்!

Advertisment

நான் பரீட்சை எழுதாமலே பாஸான நிகழ்ச்சி ஒன்றுண்டு. ஏவி.எம்.மில் நான் எழுதுவதற்கு ஒரு தனி அறை கொடுத் திருந்தார் ஏவி.எம்.முருகன் அவர்கள். மிக அழகான அறை. எல்லா வசதிகளும் செய்யப் பட்டிருந்தன. ஒருதடவை அமெரிக்காவிலிருந்து வந்த என் தாய் மாமாவும், மாமியும் என்னைப் பார்க்க ஏவி.எம். வந்திருந்தனர். அப்போது எனக்கு மிகக் குறைந்த வயது. அவர், என் வளர்ச்சி எப்படியிருக்கிறது, இவன் சினிமாவில் சிரமப்படுகிறானா? என்பதையெல்லாம் பார்க்கத்தான் சொல்லாமலே ஏவி.எம். வந்துவிட்டார். என் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டு பவர். முன்பு ஒருதடவை என் எதிர் காலத்தை நானே முடிவு செய்யவேண் டும் என்ற நோக்கத்தில் வீட்டைவிட்டு வெளியே போகத் திட்டமிட்டு ஓடியபோது, என்னைத் தடுத்து அறிவுரை சொல்லி மீண்டும் படிக்க வைத்தவர் அவர். அந்த நல்ல மனிதர், நல்ல எண்ணத்தோடு வந்து பார்த்தபோது அந்த அறையும், எனக்காக வேலை செய்த ஆபீஸ் பையன் சுப்பையா அவர் களை நான் வரவேற்று உபசரித்த விதம், மற்ற வர்கள் என்னி டம் காட்டிய மரியாதை இவற்றை யெல்லாம் பார்த்து மனமகிழ்ச்சியுடன் பாராட்டி விட்டுப் போனார்.

மறுநாள் இரவு பத்து மணிக்கு மேலும் நான் அந்த அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். அன்றைய தினம், அதாவது அந்த நேரத்தில் ஏவி.எம். படப்பிடிப்புத் தளத்தில் எல்.விஜயலட்சுமி, வாணிஸ்ரீ, விஜயலலிதா மூன்று நாயகிகளும் "பக்த பிரஹலாதா' படத்துக்காக கவர்ச்சி நடனம்... பாடல் காட்சி படமாகிக்கொண் டிருந்தது. அந்த சேதி ஸ்டுடியோ பூராவும் பரவியிருந்தது.

இரவு சாப்பாட்டை முடித்ததும் ஏவி.எம். அவர் கள், ஸ்டுடியோவுக்குள் நடந்து வருவார். அப் படி வரும்போது எனக்கு வழங்கப் பட்டுள்ள அறைக் குள் லைட் எரி வதைப் பார்த்து, ஜன்னலில் எட்டிப் பார்த்திருக்கிறார். மறுநாள் என்னை அழைத்துப் பேசும்போது, இதுபற்றிப் பேசினார். "படப்பிடிப்பு நடப்பது பற்றி தெரியுமா?'' என கேட்டார். "ஆம்'' என்று நான் சொன்னதும், "போய் பார்க்கணும்னு தோணலையா?'' என்று கேட்டார். "அதைப் போய் பார்த்து புதுசா எதைக் கத்துக்கப்போறேன்'' என்று பதில் சொன்னதும், என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்.

Advertisment

இதைப்போல் பல நிகழ்வுகள் ஸ்டுடியோவில் நடந்திருக்கின்றன. அவை ஏவி.எம். காதுக்கும் போயிருக்கின்றன என பின்னாளில் தெரிந்துகொண் டேன். படங்களின் அழகை ரசிப்பேன், நேரில் ஜொள்விடும் பழக்கம் எப்போதும் எனக்கு இருந்ததில்லை. அதனால்தான் என்னவோ பல நாயகிகள் என்னோடு அன்பாகப் பழகுவார்கள். தங்கள் கஷ்ட நஷ்டங்களை என்னோடு பகிர்ந்துகொள்வார்கள். அதையும் மீறி எனக்கு ஒரு கஷ்டம் வந்தது.

ஒரு சினிமா கம்பெனியின் மாடியில் நான் வாடகைக்கு தங்கியிருந்தேன். அந்தக் கம்பெனிக்கு ஒரு இளம்பெண் வாய்ப்புகள் கேட்டு அடிக்கடி வருவார். சிலமணி நேரம் தயாரிப்பாளர்களோடு பேசிக்கொண்டிருப்பார். ஒருநாள் இரவு... என் அறைக் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தேன். அந்தப் பெண் நின்றிருந்தார்.

"உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்... உள்ளே வரலாமா?'' என்று கேட்டுக்கொண்டே "எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்'' என்று சொன்ன அந்தப் பெண் ஏதேதோ பேசினார்.

Advertisment

"இதெல்லாம் எனக்குப் பிடிக்காது, தயவு செய்து போய்விடுங்கள்'' எனச் சொல்லி கதவை படாரென்று அடித்து மூடினேன். அதன்பின் பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் நான் அந்தப் பெண்ணை எங்கேயும் சந்திக்கவேயில்லை.

எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். நாடகங்களில் நடித்த காலங்களிலும், திரையுலகில் நுழைந்த காலங்களிலும் பெண்களுடன் அதிகம் பேசமாட் டேன். ஆனால் என் படங்கள் எனக்குத் தந்த பெரு வெற்றிகளும், கதைகளிலிருந்த பெண் கதாபாத்திரங்களின் புதுமையும் சிறப்பும் எனக்கு பல நடிகைகளை ரசிகைகளாக்கியது.

cc

நான் படங்கள் பார்த்த காலங்களில் பத்மினி, வைஜெயந்திமாலா, நூடன் போன்ற சிலரை திரையில் பார்க்கப் பிடிக்கும்.

நான் எழுதிய முதல் இந்திப்பட நாயகி பபிதாவுக்கு ஒரு ரசிகனாக கடிதம் எழுதியுள்ளேன். இவர் கரினாகபூர், கரீஷ்மா கபூரின் தாயார் ஆவார். அவரிடமிருந்து பதில் வருமென பல நாட்கள் காத்திருந்தேன்... வரவேயில்லை. அதனால் ஏமாற்றத்துக்குப் பதிலாக வெறுப்பே வளர்ந்தது. அதன்பின்னால் நடிகைகள் மீது அக்கறை காட்டுவதை தவிர்த்துவிட்டேன்.

திரையில் அழகை ரசிப்பேன், அதற்காக பல படங்களை ஒருசில பாடல்களை திரும்பத் திரும்பப் பார்க்கும் பழக்கம் உண்டு. ராஜ்கபூரின் "சங்கம்', "பாபி', "ஜிஸ்தேஷ் மே கங்கா பெஹெத்தி ஹை', "வஞ்சிக்கோட்டை வாலிபன்' போன்ற படங்களை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். அதில் நடித்த நாயகிகளுக்காக நான் திரையுலகுக்கு வந்த பின்னால் ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, ஷீலா, ராக்கி, ஹேமமாலினி இவர்களைப் பிடிக்கும். நேரில் அவர்களைப் பார்க்கும்போது தொழிலைப் பற்றி மட்டும் பேசுவேனே தவிர, வேறெதுவும் பேசவும் மாட்டேன், அநாவசியமாக சிரிக்கவும் மாட்டேன். எனக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தேன். ஏனென்றால், திரையுலகுக்கு வருவதற்காக பல தியாகங்களையும், பல கண்டங்களையும் தாண்டியே வரவேண்டியிருந்தது. அதனால் சர்வஜாக்கிரதையாக நான் வாழ்வது அவசியமாக இருந்தது. அப்படியிருந்தும்... இந்தக் கதவைத் தட்டிய சம்பவம் நடந்தது.

அடுத்த சம்பவம்...

தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் இருந்த எங்களது அலுவலகத்தின் மூன்றாவது வீட்டில் ஒரு கேரள குடும்பம் குடியிருந்தனர். அதில் ஒரு பெண் நன்றாக இருப்பார். கல்லூரியில் படித்துவந்தார். ஒருநாள் அலுவலக போன் ஒலித்தது.... எடுத்துப் பேசினேன்.

"நான் யார் என்று தெரியுமா?'' என்று கேட்க... நான் புரியாமல் குழம்பினேன்.

"அப்படியே திரும்பிப் பார்த்தா என்னைப் பார்க்க லாம்...'' என்றது அந்தக் குரல்.

சுற்றிப் பார்த்தேன். மூன்றாவது வீட்டு மாடி ஜன்னலில் போன் ரீஸீவருடன் அந்த அழகி நின்றிருந்தாள்.

"உங்க ஆபீஸ்ல உங்களத் தவிர இப்ப யாருமே இல்லேன்னு தெரிஞ்சுதான் போன் பண்றேன்'' என்றார்.

நான் மௌனமாக இருந்தேன். தடுமாற்ற மாகவும் இருந்தது. அந்தச் சமயம் சிலர் ஆபீசுக்கு வரவே போனை வைத்துவிட்டேன்.

மறுநாள் மாலை. தன் அண்ணனின் குழந்தையை தூக்கிக்கொண்டு எங்கள் அலுவலக கேட் வரை வந்து விளையாட்டு காட்டினாள் அந்தப் பெண். அதிகாலையில் தினமும் மொட்டை மாடியில் நான் எக்சர்ஸைஸ் பண்ணுவேன். அவளோ, மாடியில் ஒரு புத்தகத்தோடு வந்து அமர்ந்து படிப்பது போல் பாசாங்கு செய்வாள். நான் தினமும் 60 அடி உயரம் கொண்ட கட்டடத்தின் மொட்டை மாடி கைப்பிடிச் சுவரை பிடித்துக்கொண்டு சுற்றி நடந்துவருவேன். மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவே இந்தப் பயிற்சி. அப்படிச் செய்வதை அவள் பார்த்து பதட்டத்தோடு நின்றிருப்பதை நான் கவனிப்பதுண்டு. ஆனாலும் பார்க்காததுபோல் நானும் பாசாங்கு செய்வேன். இதற்கிடையில் அவள் பெயர், ஊர், போன் நம்பர் அனைத் தையும் எனக்கு கிடைக்கும்படி செய்தாள்.

cc

ஒருநாள் அந்தக் குடும்பம் வீட்டை காலிபண்ணிக்கொண்டிருந்தது. அந்தப் பெண் என்னிடம் பேச முயற்சித்தாள். ஆனால் அலுவலகத்தில் ஆட்கள் இருந்ததால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. இருப்பினும்... "நாம காதலிக்கவா இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே வந்தோம்? இதெல்லாம் வேண்டாம்' என முடிவு செய்தேன். அவர்கள் வீட்டை காலிசெய்து போய்விட்டார்கள். அதன் பின் மனதிற்குள் ஒரு மூலையில் அவளைக் காணாத வெற்றிடம். என்னையும் அறியாமல் என் பார்வை அவள் இருந்த வீட்டு மாடி ஜன்னலை நோக்கிப் போனது. என் வாய் அவள் பெயரை உச்சரித்து மகிழ்ந்தது. அவளைப் பார்க்க மனம் விரும்பியது. இதையெல்லாம் கவனித்த என் நண்பரும், மேனேஜருமான பாஸ்கர், என்னிடம் சொல்லாமலே அவளின் புதிய வீட்டை தேட ஆரம்பித்தார். சில வாரங்களில் அட்ரஸை கண்டுபிடித்துவிட்டார். என்னிடம் எதுவும் சொல்லாமல் காரில் ஏற்றி ஒரு பெரிய பங்களாவின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தினார்.

"எங்கே வந்திருக்கிறோம் பாஸ்கர்?'' என கேட்டேன்.

"இதுதான் ஸார் அந்தப் பொண்ணோட வீடு. வாங்க உள்ளே போய் அவங்ககிட்டேயும் பெரியவங்க கிட்டேயும் தெளிவா பேசி முடிச்சிடலாம்'' என்றார் பாஸ்கர்.

அதுதான் நட்பு. ஆனால் நான் இதுக்காகவா இந்தியா வந்தேன்? மனம் தடுமாறியது.

"இப்ப வேண்டாம் பாஸ்கர்... வீடு தெரிஞ்சிடுச்சு, கொஞ்சம் சிந்திக்கலாம்'' எனச் சொல்லி அங்கிருந்து கிளம்பினோம்.

அதன்பின் என் தாய் மாமனிடம் விஷயத்தைச் சொல்லி "நான் என்ன செய்யவேண்டும்'' என கேட்டேன். என்னை நல்வழிப்படுத்தியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. "இந்த வயசிலே வர்ற இந்த மயக்கம் காதலல்ல... ...... ஒரு வருஷத்துக்கு அந்தப் பெண்ணை நினைக்காமல் தொழில்ல கவனம் செலுத்து. அதுக்குப் பின்னாலும் அவதான் வேணும்னு முடிவு பண்ணினா, நானே வந்து உங்களை சேர்த்துவைக்கிறேன்' என்றார்... சம்மதித்தேன்.

ஒரு வருடத்துக்குள் பல மாறுதல்கள். பல படங்கள், அதில் பல கதாநாயகிகள். நான் என் தொழிலைத் தவிர, வேறு நினைப்பில்லாமல் உழைத்தேன். படமெடுக்கும் வாய்ப்பு வந்தது, என் கம்பெனிக்கு என்னைக் காதலித்த அவள் பெயரையே வைத்தேன்... "சித்ரமாலா கம்பைன்ஸ்.'

அவளை நினைக்காமலிருந்த நான், ஒரு இளம் மின்னலால் தாக்கப்பட்டேன்...

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்